• April 24, 2025
  • NewsEditor
  • 0

தமிழக காவல்துறையின் உச்சப் பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரியின் பதவிக்காலம், விரைவிலேயே முடியப்போகிறது. அந்த அதிகாரியின் பிறந்த தேதி அடிப்படையில் பார்த்தால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வுபெறவிருக்கிறார். ஆனால், அவர் தற்போதிருக்கும் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் அடிப்படையில் கணக்கிட்டால், ஜூன் மாதத்தோடு அவரை விருப்ப ஓய்வில் செல்ல அனுமதிக்கலாம். ஆனால், தங்களோடு மிகவும் நெருக்கமாக இருப்பதால், அவருக்குப் பணி நீட்டிப்பு கொடுக்கலாமா என ஆலோசித்துவருகிறதாம் ஆட்சி மேலிடம். அதன்படி, முதல் மூன்று மாதங்கள் தமிழக அரசும், அடுத்த மூன்று மாதங்கள் மத்திய அரசு அனுமதியுடனும் என ஆறு மாதங்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்க ஆயத்தமாகிறதாம் மேலிடம்!

தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது. இதில் பிரதிநிதித்துவ அடிப்படையில் இலைக் கட்சிக்குக் கிடைக்கும் இரண்டு எம்.பி-க்கள் சீட்டுகளில் ஒன்றுக்குச் சிக்கல் இருக்கிறது. இந்தச் சூழலில், புதிதாகக் கூட்டணியில் இணைந்திருக்கும் மலர்க் கட்சி, ‘சிக்கலை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எங்களுக்கு அந்த சீட்டைத் தாருங்கள்’ என்று பேரம் பேசத் தொடங்கியிருக்கிறதாம். ஒருவேளை மலர்க் கட்சிக்கு அந்த ஒரு சீட் கிடைத்தால், அது வாய்த்துடுக்கு மன்னர் புள்ளிக்குக் கொடுக்கப்படலாம் என்கிறார்கள். அதேநேரம், மாஜி காக்கிப் புள்ளியோ, இலைக் கட்சி மூலமாகவே அந்த சீட்டைப் பெறக் காய்நகர்த்துகிறாராம்!

மலைக்கோட்டை நகரத்திலுள்ள ஒரு பழைமையான மடத்தில், பல்வேறு சர்ச்சைகள் கும்மியடிக்கின்றன. மடத்தின் நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் ‘சன்’ பிரமுகர், மடத்தின் அறைகளை வாடகைக்கு விடுவதிலும், டொனேஷன்களைக் கபளீகரம் செய்வதிலுமே குறியாக இருப்பதால் மடத்தில் பணிபுரிபவர்கள் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வது வரை கீழே இறங்கிவிட்டார்களாம். போலீஸ் சோதனையில் மது விற்ற ஒருவர் சமீபத்தில் சிக்கவே, மடத்திலுள்ள பிரச்னைகளெல்லாம் ஒவ்வொன்றாக வெடித்துக் கிளம்புகின்றனவாம். ‘கர்நாடகாவில் இருக்கிறது இந்த மடத்துக்கான தலைமை பீடம். இங்கு என்ன நடக்கிறது என்பதே அங்கிருப்பவர்களுக்குத் தெரிவதில்லை. சொல்லவே நாக்கு கூசும் சம்பவங்களெல்லாம் நடக்கின்றன. மடத்தின் பெயரையே ‘சன்’ பிரமுகர் நிர்மூலமாக்கிவிட்டார்’ என்கிறார்கள் மலைக்கோட்டை பக்தர்கள். இதற்கிடையே, மடம் குறித்த பாலியல்ரீதியான விவகாரங்களும் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்திருப்பதால், விரைவிலேயே பூகம்பம் வெடிக்கும் என்கிறது விவரமறிந்த வட்டாரம்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட தி.மு.க முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக்குக்கு, சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியிருக்கிறது. ‘ஜாமீன் பெற்று வெளியே வரும் ஜாபரை, கட்சிக்காரர்கள் யாரும் பார்க்கச் செல்லக் கூடாது’ என்று தலைநகர் மாவட்டக் கட்சி நிர்வாகி ஒருவர், கறார் உத்தரவு போட்டிருக்கிறாராம். ‘ஜாபருடன் அண்ணன்தான் படுநெருக்கம். நம்மை போகக் கூடாது என்று சொல்லிவிட்டு, மேற்கு வழியாக அண்ணன் நிச்சயம் போய்ப் பார்த்துவிடுவார்’ என்று நக்கலடிக்கிறார்கள் தலைநகர் உடன்பிறப்புகள்!

பிரியாணிக்கு ஃபேமஸான ஊர் இருக்கும் மாவட்டத்தில், நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அவற்றில், மூன்று தொகுதிகள் சூரியக் கட்சி வசமிருக்கிறது. மீதமிருக்கும் ஒரு தொகுதி இலைக் கட்சி வசமிருக்கிறது. அந்த ஒரு தொகுதியை மட்டும் முடக்கும் எண்ணத்தில் செயல்படுகிறாராம் சூரியக் கட்சியின் மாவட்டப் புள்ளி. அதாவது, கடந்த நான்கு ஆண்டுகளில், சூரியக் கட்சி வசமிருக்கும் மூன்று தொகுதிகளில், 152 கோடி ரூபாய்க்கும் மேல் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றனவாம். ஆனால், இலைக் கட்சியின் வசமிருக்கும் பிரியாணி தொகுதியில், வெறும் 8 கோடி ரூபாய்க்குத்தான் பணிகள் செய்யப்பட்டிருக்கின்றனவாம். ‘இப்படி வெளிப்படையாக ஒரு தொகுதியை வஞ்சித்தால், அது மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுமே… இப்படி இருந்தால், அந்தத் தொகுதியை நாம் எப்போதுமே கைப்பற்ற முடியாதே…’ என்று வேதனை தெரிவிக்கிறார்கள் சூரியக் கட்சியினரே!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *