
ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த 26 வயது இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வாலுக்கு கடந்த 16-ம் தேதி திருமணமும், 19-ம் தேதி திருமண வரவேற்பும் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு மனைவியுடன் ஹனிமூன் திட்டத்தில் ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கிறார். ஆனால், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார்.
வினய் கொல்லப்பட்டது அவரின் குடும்பத்தாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வினய் நர்வலின் தாத்தா ஹவா சிங், “என் பேரனுக்கு திருமணம் முடிந்து ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்து செல்ல வேண்டும் என்பதுதான் திட்டம். ஜம்மு கஷ்மீர் செல்வது அவர் திட்டமே இல்லை. சுவிட்சர்லாந்து செல்வதற்கு விசா செயல்முறைகள்கூட சிரமமான காரியமல்ல.
ஆனால், அதிர்ச்சிகரமாக என் பேரனுக்கு விசா நிராகரிக்கப்பட்டது. அதனால் இருவரும் இந்தியாவில் இருக்கும் மினி சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டனர். ஒருவேளை சுவிட்சர்லாந்து சென்றிருந்தால் அவர் உயிரோடு எங்களுடன் இருந்திருப்பார்” என்றார். தற்போது வினய் தாத்தாவின் பேட்டி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.