
வீட்டிற்குள் இவ்வளவு அறைகள், இன்டீரியர் டெக்கரேஷன், அழகழகான மின்விளக்குகள் என எவ்வளவு பார்த்து பார்த்து செய்தாலும், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நமது வீட்டின் அழகை பறைசாற்றுவது எலிவேஷன் தான்.
அதை பற்றிய டிரிக்ஸ் அன்ட் டிப்ஸ்களை பகிர்ந்துகொள்கிறார் ரியல் எஸ்டேட் ஆலோசகர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி.
கட்டடத்தின் முன்பக்கம்
கட்டடத்தின் வெளித்தோற்றம் என்பது முழுக்க முழுக்க அழகுப்படுத்துதலுக்கானது ஆகும். உங்களுக்கு பிடித்த மாதிரி மற்றும் உங்களது ரசனைக்கேற்ப இந்த அழகுப்படுத்துதலை மேற்கொள்ளலாம்.
வீட்டின் முன்பக்க கதவு அல்லது கேட்டை கிராண்டாக வடிவமைக்கலாம். அதிக பளு கொண்ட கேட் பொருத்தினால், தின பயன்பாட்டின் போது சிறார் மற்றும் முதியவர்கள் பயன்படுத்துவது சிரமம். குடும்ப அங்கத்தினர் வயது மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு இவற்றை தீர்மானிக்கலாம்.
‘உயரமாக வேண்டுமா?’, ‘நீளமாக வேண்டுமா?’, ‘அதில் டிசைன் வேண்டுமா?’, ‘எப்படி டிசைன் வேண்டும்?’
எந்த மெட்டீரியல் பயன்படுத்துவது? என்பதெல்லாம் முழுக்க முழுக்க உங்கள் சாய்ஸ்.
முன்னாடியே பிளான் பண்ணிடுங்க
கட்டடத்தில் ஜன்னல், பால்கனி, வெளித்தோற்றம், முகப்பு, தண்ணீர் குழாய்கள், மாடி தண்ணீர் தொட்டி, மழைநீர் வடிகால், கழிவுநீர் வெளியேற்றம் போன்றவற்றை கட்டடம் கட்ட ஆரம்பிக்கும் முன்னரே சரியாக பிளான் செய்துவிடுங்கள். இது பின்னர் தேவையற்ற செலவுகளை குறைக்கும்.
‘கட்டத்தின் ரூப் நீட்சி மற்றும் வெளியேற்றம்’ (Projections) எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்னரே தீர்மானித்துக்கொண்டு, அதற்கு ஏற்ப கட்டடத்தின் வெளிப்பக்கத்தில் எங்கெல்லாம் மின்விளக்குகள் அமைந்திருக்க வேண்டும் என்பதையும் முன்னரே திட்டமிட்டு அதற்கு ஏற்ப மின் இணைப்புகளுக்கு வழி வகை செய்து கொள்வது நல்லது. காரணம், இது இரண்டும் கட்டடத்தின் அழகை இன்னும் அதிகரிக்க கூடியது. அதனால், இதில் சற்று சிரத்தை முன்னரே எடுத்துகொள்வது மிகவும் அவசியம்.

‘எலிவேஷன்னா என்ன… வெளிப்புற சுவர் தானே?’ என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். இன்றைய காலக்கட்டத்தில் டைல்ஸ், பேனல்ஸ், மரக்கட்டை, பலகை, என பல பலவித பொருட்கள்(materials)கொண்டு வெளிப்புற சுவர் அலங்கரிக்கப்படுகின்றன. அதனால், உங்கள் தள பொறியாளர் இடம் அனைத்து ஆப்ஷன்களையும் நன்கு ஆராய்ந்து தெரிந்துகொள்ளுங்கள். மேலும், அதற்கென பட்ஜெட்டும் ஒதுக்கிவிடுங்கள்.
இதெல்லாம் முக்கியம்!
என்ன தான் வெளிப்புற சுவரை எவ்வளவு அழகுப்படுத்தினாலும், அதை மேலும் அழகுப்படுத்துவது வண்ண பெயிண்டுகள். அதனால், பெயிண்ட் கலரையும், அதன் காம்பினேஷனையும் கவனமாக தேர்ந்தெடுங்கள்.
கட்டடம் வளர வளர உங்கள் தோட்டத்தையும் வளர்க்க, அதற்கு தேவையான தோட்ட கலை வல்லுநர்களின் அறிவுறுத்தலின்படி தொடங்கிவிடுங்கள். அப்படி செய்தால் கட்டடம் முடியவும், தோட்டமும் ஒரு லுக்கை பெறவும் நேரம் சரியாக இருக்கும்.
வெளிப்புற சுவருக்கு மட்டும் லைட்டிங் கொடுக்காமல் காம்பவுண்ட் சுவருக்கும், நடை பாதை, வீட்டின் நுழைவு, தோட்டம், பார்க்கிங், சுற்றுச்சுவர் முகப்பு போன்றவைக்கு குறைந்த மின்சாரம் உபயோகம் செய்யும் வண்ண எல்.இ.டி பல்புகள் மற்றும் லைட்டுகளை பயன்படுத்தி லைட்டிங் கொடுத்துவிடுங்கள். இதனால் வீட்டின் தின மின்சார செலவினை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்”.
ஹேப்பி ஹோம்:)