
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது `கூலி’. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் பான் – இந்தியா திரைப்படமான வெளியாகிறது. பாலிவுட்டில் அதே நாளில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆரின் ‘War 2’ திரைக்கு வருகிறது. இதனால் இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் கிளம்பி சமூகவலைதளங்களில் அதுதொடர்பான பதிவுகள் வைரலாகிய வண்ணமிருந்தன.
கோலிவுட்டில் எப்படி ரஜினிக்கு மவுசு அதிகமோ, அப்படித்தான் பாலிவுட்டிலும். தனது ஆரம்ப காலங்களிலேயே பாலிவுட்டில் Andhaa Kaanoon (1983)’, ‘Billa’, ‘Thee’, ‘John Jani Janardhan’ உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘Phool Bane Angaray’, ‘Hum’, ‘Bhagwan Dada’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ‘Bhagwan Dada’ படத்தில் ரஜினியிடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஹிருத்திக் ரோஷன்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஹிருத்திக் ரோஷன், “ரஜினி சார் ஒரு பக்காவான ஜென்டில்மேன். ‘Bhagwan Dada’ படத்தில் நான் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போது படப்பிடிப்பில் நிறைய தவறுகள் செய்துவிடுவேன்.

என்னால் காட்சிகளை மீண்டும் மீண்டும் எடுக்க வேண்டியிருக்கும். ஆனால், என் தவறை மறைத்து ‘சாரி சாரி சாரி, இது என்னுடைய தவறுதான்…’ என ரஜினி சார் என்னை காப்பாற்றுவார். அது இன்னும் என் நினைவில் இருக்கிறது. ” என்று ரஜினியுடனான நெகிழ்ச்சியான தனது அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.