• April 21, 2025
  • NewsEditor
  • 0

ரஜினி, கமல் போல டாப் ஹீரோக்களின் வழியைப் பின்பற்றுகிறார் சூரி. ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து அகல கால் வைக்காமல், ஒரு படத்தில் நடித்து முடித்த பின்னரே, அடுத்த படத்திற்கு வருகிறார் அவர். பிரசாந்த் பாண்டிராஜின் இயக்கத்தில் ‘மாமன்’ படத்தை முடித்து கொடுத்துவிட்டவர், அடுத்து ‘மண்டாடி ‘ என்ற படத்திற்கு வந்திருக்கிறார்.

மாமன் படத்தில்…

மண்டாடி

சூரியின் வளர்ச்சியை ‘விடுதலை’க்கு முன் ‘விடுதலை’க்கு பின் என வகைப்படுத்தலாம். கதைக்கான நாயகனாக அசத்துகிறார். ‘விடுதலை’க்குப் பிறகு ‘கொட்டுக்காளி’, ‘கருடன்’, என கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தார். இதனையடுத்து ‘ஏழு கடல் ஏழு மலை’, ‘மாமன்’ ஆகிய படங்கள் காத்திருக்கிறது. இப்போது ‘விடுதலை’யை தயாரித்த எல்ரெட் குமாரின் தயாரிப்பில் ‘மண்டாடி’ என்ற படத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ், கௌதம் மேனன் நடித்த ‘செல்ஃபி’ படத்தை இயக்கிய மதிமாறன் புகழேந்தி, ‘மண்டாடி’யை இயக்குகிறார்.

வெற்றிமாறனின் சிஷ்யர் இவர். ‘விடுதலை’யில் சூரியின் உழைப்பையும், அர்ப்பணியையும் பார்த்த தயாரிப்பு நிறுவனம் மீண்டும் சூரியுடன் கை கோத்திருக்கிறது. சூரியின் ஜோடியாக மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திரா விஜய், கலை இயக்குநர் கிரண், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் எனப் பலரும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கில் 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சுஹாஸ், இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.

சுஹாஸ்

”ஜி.வி. தான் இசையமைக்க வேண்டும்” என சூரி விரும்பியிருக்கிறார். படத்தின் இயக்குநர் மதிமாறனிடம் ‘செல்ஃபி’யில் ஜி.வி. நடித்திருப்பதால் அவர் ஜி.வி.யிடம் கேட்டதும் உடனே இசையமைக்க ‘ஓகே’ சொல்லி வந்தார். கடல் தொடர்பான கதை, பாய்மரப் படகு செலுத்துதல் என இருப்பதால் கதாபாத்திரத்திற்காக ஹோம் ஒர்க்கும் செய்துள்ளார் சூரி. படத்தை பற்றிய முன்னோட்டமாக ” எல்லையற்ற கடல் தன்னுள் முடிவில்லா இரகசியங்களை சுமக்கும்போது, நெருப்பினால் மட்டுமே அதன் கதைகளைச் சொல்லமுடிகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இப்படம் குறித்து விசாரிக்கையில் கிடைத்தவை. ”படத்துல சூரி மீனவராக வருகிறார். பாய்மர படகுப் போட்டியில் வழிநடத்துபவரை தான் ‘மண்டாடி’ என்பார்கள். படப்பிடிப்பு உடனே நடைபெறவிருக்கிறது. பெரும் பகுதி படப்பிடிப்பு ராமேஸ்வரம், தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் நடக்கிறது. ” என்கிறார்கள் .

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *