
“இயக்குநர் இரண்டு மணி நேரமாகக் கதை சொன்னார். கதையில் நிறைய திருப்பங்கள் இருந்தன. கேட்டபிறகு எனக்கு ரொம்பப் பிடித்தது. நான் மறுபடியும் ஸ்கிரிப்ட் படிக்க வேண்டும் என்று கேட்டு வாங்கிப் படித்தேன்.
அது இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. திரில்லர் திரைப்படங்கள் நிறைய வருகின்றன. நானும் நிறையத் திரில்லர் படங்களில் நடித்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் பஸ் டிராவல் திரில்லர் என்பது தனித்துவமாக இருந்தது,” என்று நம்பிக்கையுடன் பேசத் தொடங்கினார் நடிகர் சிபிராஜ்.
அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாளின் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது டென் ஹவர்ஸ்.
இத்திரைப்படம் தொடர்பாக நம்மிடையே பேசிய அவர், “இந்தப் படத்தை நிறைய பேர் கைதி திரைப்படத்தோடு ஒப்பிட்டுப் பேசினார்கள்.
இரண்டு படங்களிலும் லுக் ஒரே மாதிரி இருக்கிறது, இரண்டுமே ஒரு இரவில் நடந்து முடியும் கதை. அப்புறம், படத்தின் முதல் லுக் போஸ்டரை கார்த்தி அண்ணா வெளியிட்டார், டிரெயிலரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
அதனால் இந்தப் படம் அந்தப் படத்தின் யூனிவர்ஸில் இருக்குமா என்று கூடப் பேசினார்கள். ஆனால், அந்தப் படங்களுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
அந்தப் படங்கள் மாதிரி இதுவும் ஒரு நல்ல படமாக இருக்கும், அவ்வளவுதான்.
நான் நாத்திகம் பேச மாட்டேன். அப்பாதான் நாத்திகம் பேசுவார். நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
அது கடவுள் என்று சொன்னாலும் சரி, யூனிவர்ஸ் என்று சொன்னாலும் சரி.
இந்தப் படத்தை ஒப்புக்கொண்டது கதைக்காக. இதில் வரும் கெட்-அப் இதற்கு முன்பு நான் போட்டதில்லை. போலீஸாக நிறையப் படங்கள் பண்ணியிருக்கிறேன்.
மறுபடியும் போலீஸாக நடிக்கும்போது வித்தியாசமான ஒரு தோற்றம் தேவைப்பட்டது.
கதையிலேயே மலைக்குப் போவது மாதிரி இருந்ததால், தாடியை அடர்த்தியாக வளர்க்கலாம், பட்டையை அடிக்கலாம் என்று முடிவு செய்தோம்.

ரசிகர்களுக்கு நன்றி. அவர்களின் எதிர்பார்ப்புதான் எனக்கு அடுத்தடுத்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க உந்துதலாக இருக்கிறது.
இப்போது சினிமா எப்படி ஆகிவிட்டதென்றால், ஒரு ஹீரோ மூன்று படங்கள் ஹிட் கொடுத்துவிட்டு, நான்காவது படம் சரியாகப் போகாமல், அடுத்த படம் ஹிட் கொடுத்தால் கம்பேக் என்று சொல்லிவிடுகிறார்கள்.
அந்த வகையில் என் கரியரில் நிறைய அப்ஸ் அண்ட் டவுன்ஸ் இருந்திருக்கிறது.
நாய்கள் ஜாக்கிரதை நல்லா போனது, ஜாக்சன் துரை நல்லா போனது, சத்யா நல்லா போனது. ஆனால், அடுத்த சில படங்கள் எதிர்பார்த்ததைவிடக் குறைவாக இருந்திருக்கலாம்.
வெளியில் பார்க்கும்போது உங்களுக்கு இவர் இவருடைய அப்பாவின் பையன் என்று தோன்றும். எனக்கு அவர் (சத்யராஜ்) அப்பாதான். ஆனால், புரொஃபஷனலாகப் பார்க்கும்போது அவர் இன்னொரு நடிகர்.
நான் இன்னொரு நடிகரைப் பார்த்து, ‘அவரைப் போல நாம் இல்லையே’ என்று யோசித்தால், எத்தனை நடிகர்கள் இருக்கிறார்கள்? அத்தனை பேரையும் பார்த்து, ‘இவரைப் போல வரவில்லையே, அவரைப் போல வரவில்லையே’ என்று இருக்க முடியாது.
நம்மைவிடச் சிறந்த நடிகர்கள் நிறைய பேர் இருப்பார்கள், நம்மைவிடக் குறைவாகவும் நிறையப் பேர் இருப்பார்கள்.
கடந்த படத்துக்கும் இந்தப் படத்துக்கும் நாம் என்ன வித்தியாசமாகச் செய்திருக்கிறோம் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
அதனால், வீட்டில் இருப்பவர்களுடனே நாம் நம்மை ஒப்பிட்டுக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

நான் லவ் மேரேஜ்தான். கல்லூரியில் இருந்து நானும் என் மனைவி ரேவதியும் காதலித்தோம். எனக்கு இரண்டு பசங்கள் – தீரன், சமரன். அவர்கள் இருவரையும் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
நான் சின்ன வயதில் இருக்கும்போது ஸ்போர்ட்ஸ் எல்லாம் வராது. நல்லா சாப்பிட்டு ரொம்ப குண்டாக இருப்பேன்.
ஆனால், என் பசங்கள் இருவரும் ஸ்போர்ட்ஸில் நல்லா பண்ணுகிறார்கள்.
தீரன் டேக்வாண்டோ, ஃபுட்பால் நல்லா விளையாடுகிறான். சமரனும் ஃபுட்பால் மற்றும் அத்லெடிக்ஸில் நல்லா பண்ணுகிறான். வழக்கமாக அப்பா மாதிரிதான் பசங்கள் இருப்பார்கள் என்று சொல்வார்கள்.
ஆனால், இங்கே அப்படி இல்லாமல் அவர்கள் நல்லா பண்ணுகிறார்கள். அதற்காக என் மனைவிக்கு ரொம்ப நன்றி. அவள்தான் உத்வேகப்படுத்தி இதையெல்லாம் செய்ய வைக்கிறாள்.
கோயம்புத்தூர் சார்ந்து படங்கள் பண்ண வேண்டும். ‘குடும்பஸ்தன்’ கதை எனக்கு வந்தது.

ஆனால், சில காரணங்களால் அது மிஸ் ஆகிவிட்டது. எனக்கு அந்தப் படம் பார்க்கும்போது, அந்தக் கேரக்டருக்கு மணிகண்டன் செய்த நியாயம் வேறு யாராலும் செய்திருக்க முடியாது என்று தோன்றியது.
அந்தப் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். அப்படி மிஸ் ஆன இன்னொரு படம் ‘மரகத நாணயம்’. அது எனக்கு வந்த கதை. அப்போதான் ஜாக்சன் துரை ஹாரர்-காமெடி பண்ணியிருந்தேன்.
உடனே இன்னொரு ஹாரர்-காமெடி வேண்டாம் என்று அதைப் பண்ணவில்லை,” என்று மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.