• April 19, 2025
  • NewsEditor
  • 0

உத்தராகாண்டில் தனது பெயரில் கோவில் இருப்பதாக நடிகை ஊர்வசி ரவுடேலா கூறியதற்கு கடும் எதிர்வினைகள் எழுந்துள்ளன.

பத்ரிநாத் பகுதியில் வசிக்கும் மக்கள், சமய அதிகாரிகள் மற்றும் மத குருக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

என்ன பேசினார் நடிகை?

சமீபத்தில் அளித்த நேர்காணலில், இந்தியாவின் முக்கிய புனித தலமாக கருதப்படும் பத்ரிநாத் கோவில் அருகே ஊர்வசி ரவுடேலா கோவில் ( Urvashi Rautela Mandhir ) இருப்பதாகவும், உள்ளூர் மக்கள் அதனை புனிதமாக கருதுவதாகவும் கூறியுள்ளார் நடிகை ஊர்வசி.

அந்தக் கோவிலுக்கு பல்வேறு பக்தர்கள் வருவதாகவும், டெல்லி பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் சென்று வழிபடுவதாகவும், அவர்கள் தனது புகைப்படத்துக்கு மாலை அணிவித்து தன்னை “டம்தமாமை (Damdamamai)” என அழைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“நான் சீரியஸாக சொல்கிறேன், இது உண்மையில் நடக்கிறது. இதைப் பற்றி செய்தி கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. நீங்கள் அவற்றை வாசிக்கலாம்” எனப் பேசியுள்ளார்.

“ஊர்வசி தேவியின் கோவில்…” – மதகுருக்கள், மக்கள் காட்டம்

ஊர்வசியின் பேச்சு தவறானது என்று மதகுருக்கள் கூறுகின்றனர். பத்ரிநாத் தாமின் முன்னாள் மத அதிகாரியான உள்ளூர் மதகுரு புவன் சந்திர உனியல் என்பவர் இந்தியா டுடே தளத்தில் அவர் ஊர்வசி கோவில் சதி தேவியுடன் தொடர்புடையது எனக் கூறியுள்ளார்.

இது பாம்னி மற்றும் பாண்டுகேஷ்வர் கிராமங்களில் வசிக்கும் மக்களால் பாரம்பரியமாக வழிபடப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர், “நடிகை இப்படி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற கூற்றுக்களைத் தெரிவிப்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

பிரம்மா கபால் தீர்த்த புரோஹித் கூட்டமைப்பின் தலைவர் அமித் சதி, ஊர்வசியின் கருத்துகள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆழமான புராண மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட ஊர்வசி தேவியின் கோவில் மீது தனிப்பட்ட நபர்கள் இப்படிப்பட்ட உரிமைகொண்டாடும் கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது என உள்ளூர் மக்களும் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

ஊர்வசி ரவுடேலா வழிபாடு…

அதே நேர்காணலில் தற்போது தெலுங்கு படங்களில் ஊர்வசி நடித்து வருவதனால் தெற்கில் அவருக்கு கோவில் கட்டப்பட வேண்டுமா என நெறியாளர் கேள்வி எழுப்பியபோது, “ஆம் நான் அங்கே அதிகம் வேலை செய்வதால், அங்கே கோவில் இருக்க வேண்டும்” எனப் பதிலளித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு நடிகை ஊர்வசி தனது எக்ஸ் (அப்போதைய ட்விட்டர்) பக்கத்தில், தன்னை “டம்தமாமை (Damdamamai)” என மக்கள் வழிபடுவதாக பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *