
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜுன் தாஸ்,பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளதை அடுத்து இதன் ‘சக்சஸ் மீட்’ சென்னையில் நடந்தது.
அப்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறும்போது, “ஏழாவது படிக்கும் ஒரு பையன், ஒரு நடிகரைப் பார்த்து உத்வேகம் அடைந்து, இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்டு இன்று இந்த இடத்தில் நிற்கிறான். நான் அஜித் சார் ரசிகனாக இல்லாதிருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்று தெரியவில்லை. நான் எப்போதும் அஜித் சாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். நாங்கள் சந்தித்துக் கொள்ளும்போது, நான் பெரியஹிட் இல்லாத இயக்குநர். எனது முதல் படம் மட்டுமே ஹிட் கொடுத்தது. ஆனால், அஜித் சாரைப் பொறுத்தவரையில் எப்போதும் யாரிடமும் வெற்றி தோல்வியைப் பார்த்தது கிடையாது. சக மனிதராகத்தான் பார்ப்பார். என்னிடம் இருந்து அவர் என்ன கவனித்தார் என்பது எனக்கு இப்போதுவரை கேள்வியாக உள்ளது.