
`கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. `குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இதையெல்லாம் தாண்டி பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது, பல குழந்தைகளை படிக்க வைப்பது எனத் தொடர்ந்து சமூக சேவை செய்து வரும் பாலாவின் குணம் மக்களின் இதயத்தை கவர்ந்தது.
பாலாவும் ராகவா லாரன்ஸும் இணைந்து உதவிய வீடியோக்களை பாலா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருப்பார். அதன் மூலம் இருவரும் நெருக்கமானார்கள்.
சமீபத்தில் ஜீ தமிழில் `டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் பாலாவிடம் `கெரியரில் என்ன ஆசை’ என்று ராகவா லாரன்ஸ் கேட்டார். அதற்கு பாலா `ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை’ என பதிலளிக்கவும், `ராகவேந்திரா புரொடெக்சன்ல நிறைய படம் பண்ணல… உனக்காக என் ஃப்ரெண்ட்ஸ் நிறைய புரொடியூசர்ஸ் இருக்காங்க… நல்ல காமெடி அண்ட் லவ் கதை பாலாவுக்கு பொருத்தமா இருக்கும். இதைப் பார்க்கிற டைரக்டர் யார்கிட்டயாச்சும் கதை இருந்தா சொல்லுங்க’ எனச் சொல்லியிருப்பார். அவர் சொல்லவும் பாலா நெகிழ்ந்து மேடையிலேயே அழுதிருப்பார்.
இப்போது இது குறித்து ராகவா லாரன்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் தம்பி பாலாவின் கனவை நிறைவேற்றும்படியாக, அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தி அந்தப் படத்தை நான் தயாரிப்பதாகச் சொல்லியிருந்தேன். அந்தப் படத்திற்கு இப்போது நல்ல தயாரிப்பாளர், நல்ல கதையுடன் கிடைத்துவிட்டார். ஆமாம், பாலா ஹிரோவாக அறிமுகமாகும் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது” என்ற மகிச்சியான செய்தியைப் பகிர்ந்திருக்கிறார்.
ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் பாலா. ‘jayi kiran’ தயாரிப்பு நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இதுகுறித்து பாலாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது வாழ்நாளின் பெரும் கனவு நிறைவேறியுள்ளது. நான் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை” என்று நன்றி தெரிவித்திருக்கிறார்.
வாழ்த்துகள் பாலா!