
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் ‘தக் லைஃப்’ ரிலீஸ் வருகிற ஜூன் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ‘நாயகன்’ படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், ‘தக் லைஃப்’ எதிர்பார்ப்பிற்குள்ளான படமாக மாறியிருக்கிறது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் பேசியிருக்கும் நடிகர் அசோக் செல்வன், “இந்த மாதிரி படம் பண்றதுக்குக் காரணம் மணி சார், கமல் சார் ரஹ்மான் சார், சிம்பு சார்னு எல்லோரும்தான். நான் இவங்களோட படங்கள்தான் பார்த்து வளர்ந்திருக்கேன். என்னுடைய நேர்காணல்கள்ல கண்டிப்பாக கமல் சார் பற்றி பேசிடுவேன். இந்தப் படத்தோட படப்பிடிப்பு எனக்கு மாயையாவே போயிடுச்சு. அதனால மணி சார் இன்னொரு படம் கொடுங்க. எனக்கு இது பெரிய வாய்ப்பு. இவங்க எப்படி வேலைகளை கவனிக்குறாங்கன்னு நான் பார்த்துக்கிட்டே இருந்தேன். நான் சிம்பு சாருடைய மிகப்பெரிய ரசிகன். நான் ஸ்கூல் படிக்கும்போது வல்லவன் ஷூட் நடந்தது. அப்போ அவரைப் பார்க்கப் போன பலர்ல நானும் ஒருத்தன். போர்ட் கார்ல பயங்கர ஸ்டைலாக வருவாரு. ‘ஓ மை கடவுளே’ படம் பார்த்துட்டு சிம்பு சார் என்னைக் கூப்பிட்டு பேசினார்.” என நெகிழ்ச்சியுடன் அசோக்செல்வன் பேசினார்